Our Songs

ஜமால் முஹம்மது கல்லூரி
முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை)

02-05-2011 அன்று சிங்கப்பூரில் “வைர விழா” கொண்டாடி சமர்ப்பணம் செய்த

கல்லூரிப் பாடல்

பாடல் ஆக்கம்: பேராசிரியர், முனைவர் நாகூர் ரூமி (முன்னாள் மாணவர்)

பாடியவர்: ‘ஆன்மீக இசைத்தென்றல்’ அ. ஜைனுலாபிதீன் பைஜி

திரை: நினைத்தாலே இனிக்கும் இசை: அழகாய் பூக்குதே

Please click here to listen to the Song : Our Song

பல்லவி

கனவாய் பூத்ததே நனவாய் ஆனதே
நிறைவாய் மாணவர் எல்லோரும் கொண்டாடும் கல்லூரி உண்டானதே

ஞானமே தந்ததே எம் ஜமாலே
வானமே வந்ததே பூமி மேலே

பாலகன் கண்டதோர் அன்னை போலே
மீண்டுமோர் கருவறை தந்த தாயே எம் ஜமாலே

கனவாய் பூத்ததே நனவாய் ஆனதே
நிறைவாய் மாணவர் எல்லோரும் கொண்டாடும் கல்லூரி உண்டானதே

சரணம் – 1

ஐம்பத்து ஒன்னாம் ஆண்டினில் அமைந்தாயே
அறுபது ஆண்டுகள் அறம் பொருள் உரைத்தாயே

உயர்தரக் கல்வி அழகுறக் கொடுத்தாயே
உலகினில் உயர்ந்து வாழ்ந்திட வைத்தாயே

உலகெல்லாம் உன் புகழ், பரவத்தான் தொழுகிறேன், என் தாயே

கனவாய் பூத்ததே நனவாய் ஆனதே
நிறைவாய் மாணவர் எல்லோரும் கொண்டாடும் கல்லூரி உண்டானதே

சரணம் – 2

திருச்சியில் தொடங்கிய முயற்சியின் பயனாலே
சிங்கை பஹ்ரின் எங்கினும் பரந்தாயே

இளங்கலை தொடங்கி முதுகலை கொடுத்தாயே
வளங்களை வழங்கி வாழ்ந்திட வைத்தாயே

சிங்கப்பூர் பிரிவிது, தங்கத் தேர் உறவிது, அன்பாலே

பல்லவி

கனவாய் பூத்ததே, நனவாய் ஆனதே
நிறைவாய் மாணவர் எல்லோரும் கொண்டாடும் கல்லூரி உண்டானதே

ஞானமே தந்ததே எம் ஜமாலே
வானமே வந்ததே பூமி மேலே

பாலகன் கண்டதோர் அன்னை போலே
மீண்டுமோர் கருவறை தந்த தாயே எம் ஜமாலே


தமிழ் மொழி விழா 2015

18-04-2015 அன்று ஜமால் முஹம்மது கல்லூரி
முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) நடத்திய
“கவிஞர் மு. மேத்தாவின் நட்சத்திர ஜன்னலில்” நிகழ்ச்சியில்
இடம்பெற்ற சிறப்புப் பாடல்

திரை: நூற்றுக்கு நூறு

மெட்டு: நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் நீ வர வேண்டும்

பாடலாசிரியர்: முனைவர் முஹிய்யத்தீன் அப்துல் காதர், சங்கத் தலைவர்

பாடியவர்: “ஆன்மீக இசைத் தென்றல்” அ. ஜைனுல் ஆபிதீன் ஃபைஜி

நாம் அன்னைத் தமிழை வாழ்த்திடவே ஒன்று கூடுவோம்
நம் கண்ணைப் போலக் காத்திடவே என்றும் நாடுவோம்
சிறந்து விளங்க முழங்கிடுவோம் தமிழை வீட்டிலே
செம்மொழியும் தென்றலன்றோ சிங்கை நாட்டிலே!

(நாம் அன்னைத் தமிழை…)

கம்பன் சொன்ன மொழி நீயே
வள்ளுவன் தந்த வழி நீயே
தமிழே பாடி வா

உன்னை நினைத்து சுவைப்பேனே
என்னை மறந்து திளைப்பேனே
உயிரே ஓடி வா

வீசி வரும் பூங்காற்றும் யோசிப்பது தமிழ்தானே!
பேசிப் பேசி சுவாசிப்பதும் பைந்தமிழே உனைத்தானே!

தமிழை நேசிப்போம்…
தமிழில் பேசுவோம்…

(நாம் அன்னைத் தமிழை…)

அமுதம் என்று சொன்னாலே
தமிழே எங்கள் முன்னாலே
உன் புகழ் வானிலே

உள்ளம் துள்ளும் தன்னாலே
இல்லம் முழுதும் பொன்னாளே
எல்லாம் உன்னாலே!

செந்தமிழை வளர்த்திடுவோம் சிங்கைநகர் மண் மேலே
எந்தனுயிர் கொண்டாடும் சங்கத்தமிழ் கண் போலே

தமிழை நேசிப்போம்…
தமிழில் பேசுவோம்…

(நாம் அன்னைத் தமிழை…)


 

ஜமால் முஹம்மது கல்லூரி
முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை)

22-11-2015 அன்று “ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா” நிகழ்ச்சியில்
இடம்பெற்ற

சிறப்புப் பாடல்

பாடல் ஆக்கம்: பேராசிரியர், முனைவர் நாகூர் ரூமி (முன்னாள் மாணவர்)

“நூருல் ஹூதா” இசைக் குழு ( முஹம்மது அன்சாரி , முஹம்மது இல்யாஸ் & முஹம்மது பர்ஹான் )

திரை: காதலுக்கு மரியாதை

மெட்டு: என்னை தாலாட்ட வருவாளோ

பல்லவி

உன்னைப் பாராட்ட வழி யாது
சொல்லில் சீராட்ட மொழி ஏது

கல்வித் தாயான உனை நாங்கள்
என்றும் தாலாட்ட முடியாது

பட்டம்பெறும் தினமே பட்டம் விடும் மனமே
முத்தளிக்கும் கடலே, முழு மதியே
தஞ்சம் உந்தன் நெஞ்சம் என தழுவிடுமே

சரணம் – 1

ஆயிரம் ஆசைகள் நெஞ்சில் மூட்டினாய்
சீரிய சாதனை செய்து காட்டினாய்
ஜமால் ஜமால் நீ வாழ்கவே

புதிய உறவுகளைக் காட்டினாய்
அரிய கனவுகளைக் கூட்டினாய்
ஜமால் ஜமால் நீ வாழ்கவே

போதிக்க இது ஒன்று போதாதா
சாதிக்கத் துணையாக ஆகாதா

அறிவுக்கு விருந்தாகும் கல்லூரி
அகிலத்தை அழகாக்கும் கல்லூரி

கனவொன்றை நனவாக்குமே

சரணம் – 2

பழைய மாணவர்கள் யாவரும்
உறவுப் பாலம் கட்டிப் போற்றுவார்
ஜமால் ஜமால் நீ வாழ்கவே

பிரிய நினைப்பதில்லை யாருமே
உரிய பொழுதில் வந்து சேருமே
ஜமால் ஜமால் நீ வாழ்கவே

சங்கைக்குப் பொருளாக இருக்கின்றாய்
சிங்கைக்கு ஒளியாகச் சிரிக்கின்றாய்

வானுக்கு ஒளிகூட்டும் கதிர் நீயே
வாழ்வுக்கு வழிகாட்டி நீ தாயே

நிகழ்காலம் நீ தந்ததே

பல்லவி

உன்னைப் பாராட்ட வழி யாது
சொல்லில் சீராட்ட மொழி ஏது

கல்வித் தாயான உனை நாங்கள்
என்றும் தாலாட்ட முடியாது

பட்டம்பெறும் தினமே பட்டம் விடும் மனமே
முத்தளிக்கும் கடலே, முழு மதியே

தஞ்சம் உந்தன் நெஞ்சம் என தழுவிடுமே

ஜமால் ஜமால் நீ வாழ்கவே…

ஜமால் ஜமால் நீ வாழ்கவே…


தமிழ் மொழி விழா 2016
24-04-2016 அன்று ஜமால் முஹம்மது கல்லூரி
முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) நடத்திய
திரு கோபிநாத் வழங்கிய “மனதில் உறுதி வேண்டும்” நிகழ்ச்சியில் மாணவர்கள் வழங்கிய ‘கவிதை மாலை’

மாணவ மாணவியர்கள்:

தகசீன் நசீர் – செயின்ட் கேபிரியல்ஸ் உயர்நிலைப்பள்ளி
ஃபரீஹா ஃபரீஜ் – ஓபெரா எஸ்டேட் தொடக்கப்பள்ளி
மேரியோ ரினால்டி நிக்சன் – செயின்ட் கேபிரியல்ஸ் உயர்நிலைப்பள்ளி
சாஜிதா – சீடார் பெண்கள் உயர்நிலைப்பள்ளி
முகமது ஷராஃபத் – தெமாசெக் உயர்நிலைப்பள்ளி
ஃபாத்திமா ஷஃபானா – கம்பஸ்வேல் தொடக்கப்பள்ளி

எழுதியவர் : திரு ஃபரீஜ் முஹம்மது

‘கவிதை மாலை’

அன்னை என்ற மூன்றெழுத்தில்
அன்பு என்னும் மூன்றெழுத்தை அழகாய் உணர்ந்தோம்!
பாசம் என்னும் மூன்றெழுத்தில் பாகாய் உழன்றோம்!
பரிவு என்னும் மூன்றெழுத்தைப் பசியில் உணர்ந்தோம்!
கருணை என்ற மூன்றெழுத்தைப் கண்ணாரப் பெற்றோம்!
அன்னை – அவள் ஒரு வரம்!

தமிழ் என்ற மூன்றெழுத்தில்
இனிமை என்ற மூன்றெழுத்தின் இதத்தினைப் பெற்றோம்!
இளமை என்ற மூன்றெழுத்தின் அர்த்தத்தைக் கற்றோம்!
புலமை என்ற மூன்றெழுத்தின் புதிரினை உணர்ந்தோம்!
பழமை என்னும் மூன்றெழுத்தின் புதுமையை உணர்ந்தோம்!
தமிழ் – ஒரு வரம்!
ஜமால் என்ற மூன்றெழுத்தில்
அன்னையையும் தமிழையும் ஒன்றாய்க் கண்டோம்!
கல்வி என்னும் மூன்றெழுத்தைக் கனியாய்க் கொய்தோம்!
அறிவு என்னும் மூன்றெழுத்தைப் அழகாய்க் கற்றோம்!
பண்பு என்னும் மூன்றெழுத்தைப் பரிசாய்ப் பெற்றோம்!
உலகு என்னும் மூன்றெழுத்துக்கு உயர்வாய் சென்றோம்!
ஜமால் – இதுவும் ஒரு வரம்!

உலகத்துக் கருணையெல்லாம் ஒன்றாய்ச் சேர்த்து
நிலவின் குளுமையையும் நீரின் இனிமையையும் கலந்து
தென்றலின் தழுவலையும் தேனிசையயும் குழைத்து
வண்டுகள் மொய்க்கும் வாச மலர்களால் நிரப்பி
அன்பெனும் ஒரு உருவம் செய்தால்
அவள்தான் அன்னை!

மழலைகளின் சொற்களை மலைபோல் குவித்து
குழலிசை யாழிசை கூவும் குயில் இசைதனை இணைத்து
தவழும் குழந்தையின் தவிப்பையும் தாவித் தூக்கும் தாயின் அணைப்பையும் சேர்த்து
இலவம் பஞ்சின் மென்மையும் இனிய மயிலிறகின் வருடலும் கொண்ட
ஒரு இசை இருக்குமானால்
அதுதான் தமிழ்!

அறிவெனும் அமுத உணவை பரிவுடன் படைத்து
பண்பெனும் பானகத்தை பாத்திரங்கள் கொண்டு நிரப்பி
ஞான ஊற்றுக்கள் பீறிடும் ஞாயிறு ஆசிரியர்களை
நயத்துடன் பரிமாறும் நாயகர்களாக நிறுத்தி!அறுசுவையோடு படைக்கும் அறிவு உணவகம் ஒன்று இருக்குமானால்
அதுதான் ஜமால்!

சங்கக் காலத் தமிழை சங்கம் கட்டி வளர்த்தது மதுரை!

இந்தக்காலத் தமிழைத் தமிழ்ச் சங்கங்கள் கொண்டு வளர்ப்பது சிங்கை!

கண்ணகிக் காலத் தமிழில் காவியம் படைத்தது விந்தை!

கணிணிக்காலத் தமிழை கண் போல் காப்பது சிங்கை!

இனத்தைக் காப்பது சிங்கை! நம் மனத்தை வென்றது சிங்கை!

மொழியைக் காப்பது சிங்கை! நம் வழியைக் காட்டியது சிங்கை!

சிங்கையை நேசிப்போம்! சங்கையாய் வாழ்வோம்!
தமிழை நேசிப்போம்! தமிழில் பேசுவோம்!